வட்டவளை பகுதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கருகிலே குறித்த வீதி பகுதியளவில் தாழிறங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலே நேற்று மாலை பெய்த கடும் மழையில் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதி விரைவில் புனரைமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.