பிரித்தானியாவிற்கு செல்ல முடியும் ஆனால் வருகை தர முடியாது...!
சில நாடுகளில் புதிய வகையான கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக தற்போது அமுலில் உள்ள நடைமுறைகளை தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை என்பவற்றின் அனுமதி பெற தேவையில்லை என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னர் போன்று சகல சுற்றுலா பயணிகளும் அவ்வாறே பதிவு செய்வது கட்டாயம் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களுக்கோ பயணிகளுக்கோ இலங்கைக்குள் பிரவேசிக்க இன்று அதிகாலை முதல் அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.