கண்ணிவெடியில் இருந்து தப்பித்தது இலங்கை - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு புகழாரம்

கண்ணிவெடியில் இருந்து தப்பித்தது இலங்கை - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு புகழாரம்

கண்ணிவெடி என்று கருதப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த அரசாங்கத்தையே சேரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் - மேலும் கூறுகையில்,

அமெரிக்கா இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த 480 மில்லியன் டொலர் நிதியுதவியை கண்ணிவெடி என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டின் இறையாண்மைக்கு எம்.சி.சி ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆட்சிக்கு வர முன்னரே நாம் குறிப்பிட்டோம்.

எம்.சி.சி ஒப்பந்தம் போக்குவரத்து அபிவிருத்தி மற்றும் காணி முகாமைத்துவ விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு விடயங்களிலும் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை இரகசியமான முறையில் கைச்சாத்திட தீர்மானித்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் மறைக்கப்பட்டன.

ஆங்கில மொழியில் இருந்த எம்.சி.சி ஒப்பந்தத்தை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்து பல விடயங்களை பகிரங்கப்படுத்தினோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதற்கேற்ப எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட நாம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார்.