இரண்டாவது தடவை மேற்கொண்ட பரிசோதனையிலும் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்ட தால் இரண்டாவது தடவையாகவும் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தலவாகலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி அகரப்பதனை தோன்பீல்ட் தோட்டத்தில் மரணச்சடங்கில் கொழும்பிலிருந்த வந்த பெண்ணொருவர் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக தோன்பீல்ட் தோட்டத்திலுள்ள 300 பேர் வரையில் பி.சிஆர் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஐந்து வயது குழந்தைக்கு தொற்று உறுதியானதையடுத்து தோன்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் கடந்த 16 ஆம் திகதி சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
அன்றைய தினமே அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதன் அறிக்கை நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனையடுத்து இன்றும் இரண்டாவது முறையும் பி.சி.ஆர் மேற்கொண்டதில் கிடைத்த அறிக்கையிலும் தொற்று இருப்பது உறுதியானது. எனினும் சுயதனிமை காலப் பகுதியில் கண்டி மற்றும் தலவாகலை பகுதிகளில் இடம்பெற்ற அரச கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்ற ஹட்டன் டிக்கோயா நகரசபை, தலவாகலை லிந்துலை நகரசபை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளின் தலைவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 12.12.2020 அம்பகமுவ பிரதேச செயலகத்தில் இடம்பெறவிருந்த அபிவிருத்தி குழு கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
