நாட்டின் அநேக பிரதேசங்களில் இன்றும் மழை...!
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாறை, மட்டகளப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்ற வீசக்கூடுமெனவும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பொலன்னறுவை - அரலன்வில பகுதியில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி அங்கு 181.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாயுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 180.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக காத்தான்குடி, நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளின் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.