
நாட்டில் கொரோனா தொடர்பான முழுமையான விபரங்கள்!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்செல்வத்திற்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஆலோசனைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த பிரதேச சபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவருக்கு கடந்த 16 ஆம் திகதி எல்பியன் கோன்பீல்ட் தோட்டத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
எனினும் கடந்த 17 ஆம் திகதி பல கூட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த கூட்டங்களில் நுவரெலியா, தலவாக்கலை – லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை, நோர்வுட், மஸ்கெலிய மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இன்றைய தினம் நுவரெலிய நீதவான் நீதிமன்றில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக தலவாக்கலை – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொற்றுறுதியான அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியும் இணைந்து உற்பத்தி செய்துள்ள பைசர் பயோன்டெக் கொவிட் 19 தடுப்பூசி, நாட்டின் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு அமைய பொருத்தமற்றது என ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் முன்னெடுத்திருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பிரித்தானியா – ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 594 கொரோனா நோயாளர்களுள், பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
253 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
124 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 62 பேர் கண்டி மாவட்டத்திலும், 49 பேர் களுத்துறை மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 14 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 13 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும் பதிவாகினர்.
அம்பாறை மாவட்டத்தில் 8 பேரும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 7 பேரும், காலி மாவட்டத்தில் 6 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 3 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 2 பேரும், மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும் கண்டறியப்பட்டனர்.
இதேநேரம், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இரண்டு பேருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது
இதேவேளை, நுவரெலியாவில் உள்ள விருந்தகங்களில் தங்கவைக்கப்படும் சுற்றுலா பயணிகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்களின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நுவரெலிய மாநகர சபையின் நகர முதல்வர் சந்தன லால் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நகரில் கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.