பிரதமர் தலைமையில் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரஜமஹா விகாரை!
பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கல்கே விகாரை உத்தராராமவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமரினால் சியம் மஹா நிகாயவின் அஸ்கிரி பீட அனுநாயக்கர், பொலன்னறுவை சொலஸ்மஸ்தானாதிபதி கண்டி அஸ்கிரிய பீடத்தின் கெடிகே ரஜமஹா விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய வெடறுவே ஸ்ரீ உபாலி அனுநாயக்க தேரரிடம் சன்னஸ் பத்திரம் கையளிக்கப்பட்டது.
அதிவணக்கத்திற்குரிய வெடறுவே ஸ்ரீ உபாலி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினரால் இதன்போது பிரதமர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆசிர்வதிக்கும் வகையில் பிரித் பாராயண நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை விளக்கும் வகையில், பௌத்தத்தை முன்னுரிமையாகக் கருதி, ஆன்மீக ரீதியில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவது மற்றும் இலங்கையின் வரலாற்று பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து அர்ப்பணிக்கும் நோக்கத்துடன் பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ராஜமஹா விகாரை இல 2201ஃ2 என்ற அதி விசேட வர்த்தமானி ஊடாக புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு சியம் மஹா நிகாயவின் அஸ்கிரி பீட அனுநாயக்கர், பொலன்னறுவை சொலஸ்மஸ்தானாதிபதி கண்டி அஸ்கிரி பீட கெடிகே ரஜமஹா விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய வெடறுவே ஸ்ரீ உபாலி அனுநாயக்கர் தேரர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரால் பிரதமருக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.