கொரோனா தொற்றாளரின் அறையை மூடிய வைத்தியசாலை நிர்வாகம்..!
நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 594 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 554 பேரும் சிறைச்சாலை கொத்தணிகளில் 38 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 590 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் நேற்றைய தினம் கண்டறியப்பட்ட கொவிட்19 நோயாளர்களில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
8 ஆயிரத்து 818 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 715 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 28 ஆயிரத்து 267 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை கேகாலை பொது மருத்துவமனையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதனால் அந்த வைத்தியசாலையின் ஒரு நோயாளர் அறையை தற்காலிகமாக மூடுவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த நோயாளர் அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை மாவனெல்லை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அக்குறனை பகுதியில் இருந்து கலேன்பிந்துனுவெள நகரில் வர்த்தக நிலையங்களை நடத்தி செல்லும் இரண்டு வர்த்தகர்களுக்கு நேற்று கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த நகரில் உள்ள பல்வேறு வர்த்தகநிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு வர்த்தகர்களுக்கும் அக்குரனை பகுதியில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதன் பெறுபேருகள் கிடைப்பதற்கு முன்னரே கலேன்பிந்துனுவெவ நகருக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 563 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மேற்படி இருவரும் ஏற்கனவே தொற்று உறுதிபடுத்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களாவர்கள்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தமது பேஸ்புக் கணக்கில் இதனைப் பதிவு செய்துள்ளார்.