மேல் மாகாண பாடசாலைகளை திறப்பதா? இல்லையா? இன்று அறிவிக்கப்படும்..! - கல்வி அமைச்சர்..!
திருகோணமலை கோட்டக் கல்விக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுகின்றன.
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகரத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் 15 பேர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் இன்று மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
ஹட்டன் வலயக் கல்விப்பணிபாளர் பி.ஸ்ரீதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் கடமையாற்றிய பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாதை அடுத்த கடந்த 6 ஆம் திகதி முதல் குறித்த பாடசாலை மூடப்பட்டது.
இந்தநிலையில் சுகாதார பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைய இன்றைய தினம் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் கற்றல் நடவடிக்கைகாக திறக்கப்படவுள்ளது.
பாடசாலையின் வகுப்பறை உட்பட அனைத்து இடங்களிலும் நேற்று தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதால் எந்தவி அச்சமும் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கலாம் என ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று முதல் கல்விச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளின் கீழ் விரைவில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பது இயலாத காரியம்.
பாடசாலைகளை திறக்க கூடிய மாவட்டங்களில், பின்பற்ற வேண்டிய சுகாதார முறைமைகள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேல் மாகாணத்தில் ஒரே தடவையில் பாடசாலைகளை திறப்பது கடினமான விடயம்.
அது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.