Rapid Antigen பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

Rapid Antigen பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

எழுமாறாக முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சோதனை நடவடிக்கைகளை புறக்கணிப்பதால், முழு சமூகமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் கருதியே சுகாதாரப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு இன்றைய தினமும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கொச்சிக்கடை பகுதியிலும் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதியிலும் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் கொஸ்கம சாலாவ பகுதியிலும் கொழும்பு – மாத்தறை பிரதான வீதியின் பேருவளை பகுதியிலும் இந்த பரிசோதனை நடத்தப்படுகின்றது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 6 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.