இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது..!

இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது..!

எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், அப்போதைய பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க அவசரமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாதிடும் யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தபோது, பெரும் எதிர்ப்பலை எழுந்திருந்தது.

நடப்பு அரசாங்கம் இது குறித்து அமெரிக்காவுடன் பேசுவதாக தெரிவித்து வந்தபோதும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை

இந்த நிலையில், இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த உடன்படிக்கையின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வருடாந்த தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, எம்.சி.சியின் இயக்குநர்கள் குழு பெனின், பர்கினா பெசோ, கோட் டி ஐவரி மற்றும் நைகர் ஆகியவற்றை பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான திட்டங்களுக்கு தகுதி வாய்ந்ததாக மீண்டும் தேர்வு செய்துள்ளது.

அத்துடன், சிறிய வளர்ச்சிக்கு மலாவி, மொசாம்பிக், திமோர்-லெஸ்டே மற்றும் டுனிசியா முதலான நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எத்தியோப்பியா, கென்யா மற்றும் காம்பியா ஆகியவை ஆரம்பநிலை திட்ட மேம்பாட்டுக்காகவும், இந்தோனேசியா, கொசோவோ மற்றும் லெசோதோ முதலான நாடுகளின் வளர்ச்சிக்கு அந்த சபை தமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.