விக்டோரியா அணை பாதுகாப்பான நிலையில்...!
அண்மையில் கண்டியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த நிலநடுக்கம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது விக்டோரியா அணைக்கட்டு நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பின்போது குறித்த அணைக்கட்டு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் இதுகுறித்து சமூகத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வந்த போதிலும் விக்டோரியா அணைக்கட்டு பாதுகாப்பான முறையில் அமைந்துள்ளதாகவும் குறித்த அணைக்கட்டை எந்நேரமும் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கான திட்டமிடல் அதிகாரி எஸ்.ஆர்.ஏ. அருப்பொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அணைக்கட்டு யாதேனுமொரு முறையில் பாதுகாப்பற்ற நிலைமைக்குத் திரும்புமாயின் அதற்குரிய நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
தற்போது இலங்கையில் 4 நில அதிர்வு மானிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக துல்லியமாக விபரங்கள் பெற்றுக் கொள்ள இயலுமாகையால் இடர்கள் தொடர்பான தகவல்களை வழங்க உறுதியாக முடியுமெனவும் புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன த சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை விக்டோரியா அணைக்கட்டை பார்வையிடுவதற்கு இம்மாதம் 22ம் திகதி விஜயமொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.