சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்துமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை
இலங்கை பாடசாலை அதிபர் பதவிகளுக்கு, பதில் அதிபர்களை சட்டவிரோதமாக தரமுயர்த்தும் ஏற்பாடுகளை கல்வி அமைச்சு எடுத்து வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
பாடசாலை அதிபர்களின் கடமைகளை உள்ளடக்கிய பதில் அதிபர்களை பதவியில் நிரந்தரமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர்கள் சேவைக்கு தகுதியற்ற, ஆசிரியர் சேவையில் உள்ளவர்களை அதிபர்களாக்குவது, இலங்கை அதிபர் சேவை யாப்பினை கடுமையாக மீறும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கூறுகிறார்.
இலங்கை அதிபர்களின் சேவை யாப்பின் எண் 1885/31 இன் படி போட்டிப் பரீட்சையை நடத்தி பாடசாலைகளின் அதிபர்களை நியமிக்க வேண்டும் என அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அவ்வாறில்லாமல் பாடசாலைகளின் பதில் அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்களை அதிபர் சேவைக்கு உள்வாங்கவோ, அவர்களது நியமனத்தை நிரந்தரமாக்கவோ முடியாது." என ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு சந்தர்பங்களில் பதில் அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இலங்கை ஆசிரியர் சங்கம் இதுபோன்ற நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் வரை தாம் சென்றிருப்பதாகவும், ஆசிரியர் சங்கத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவை விதிகளை மீறி கல்வித்துறையில் நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2011 டிசம்பர் 11ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, டிசம்பர் 31, 2010ஆம் திகதிளவில் மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பணியாற்றிய 2,118 பேர் அதிபர் பதவிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற ஆட்சேர்ப்புகளை ஒரு முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது எனவும், 2011ற்கு பின்னரான அதிபர் சேவைக்கான அனைத்து ஆட்சேர்ப்புகளும் சேவை யாப்பிற்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் தெளிவாகக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011 டிசம்பர் 15ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில், அப்போதைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கையெழுத்திட்டதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்தை மீறி பதில் அதிபர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பதானது கேலிக்குரிய விடயமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் 2009 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்ட பின்னர், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிபர் சேவையில் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதற்கமைய சுமார் 10,000 அதிபர்கள் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவ்வாறான, சூழ்நிலையில் பதில் அதிபர்களாக பணியாற்றும் பலர், தற்போது அதிபர்களாக செயற்படுவதாகவும், அவர்கள் தமது கடமைகளை சரியாக செய்ய முடியாமல் பல்வேறு அரசியல் தாக்கங்களுக்கு உள்ளாவதாகவும் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
"அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுமாயின், சேவை யாப்பிற்கு அமைய போட்டிப் பரீட்சைகளை நடத்தி முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும், சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இந்த முறையில் சட்டவிரோதமாக செயற்படுவது துரதிர்ஷ்டவசமானது." எனவும் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பதில் அதிபர்களை நிரந்தரமாக்கக் கூடாது எனவும், இந்த தீர்மானத்தை மீறி அமைச்சரவை பத்திரம் ஊடாக சேவை யாப்பை மீறும் வகையில் பதில் அதிபர்களை நிரந்தரமாக்கும் சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விச் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.