சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம்பெற்ற புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம்பெற்ற புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன் போது பக்த அடியார்கள் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

400 வருடங்களுக்கு மேல் பழமையான புதுமைமிகு புதூர் நாகதம்பிரானின் அருளினைப் பெறுவதற்காக அதிகளவிலான பக்தர்கள் வருகை தந்த போதும், கொவிட் - 19 தாக்கம் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு 80 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பக்தர்கள் தொகை அதிகரித்தமையால் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்தியாலம் சென்று வழிபட சுகாதார பரிசோதகர்களால் தற்காலிக பாஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆலயத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயில் வீதியில் பக்தர்கள் நிறுத்தப்பட்டு சுகாதார வழிமுறைகளுடன், சமூக இடைவெளி பேணி ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆலயத்திற்குள் சென்ற பக்தர்கள் புதூரில் குடி கொண்டிருக்கும் நாகதம்பிரானுக்கு பால் ஊற்றியும், பொங்கல் படைத்தும் வழிபட்டதுடன், விசம் தீண்டியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் புதூர் நாகதம்பிரான் ஆலய மண்ணையும் எடுத்துச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஆலயத்தில் பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அதிகளவில் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.