மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் – தயாகமகே
மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “செப்டம்பர் மாதமளவில் தேர்தலை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி எந்தக் காரணங்களைக் கொண்டும் தேர்தல்களுக்கு அஞ்சும் ஒரு கட்சியல்ல என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்க இந்த கட்சியை ஆரம்பித்தமைக்கான நோக்கமே நாட்டின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றத் தான்.
எமக்கான மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தலைப் பார்த்து அஞ்சவேண்டியத் தேவை என்றும் கிடையாது. அரசியலில் தூய்மையானவர்களும், மோசடியாளர்களும் எல்லாக் கட்சிகளிலும்தான் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நிராகரிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகத் தான் களமிறங்கியுள்ளார்கள். மக்கள்தான் இவர்களை தெரிவு செய்ய வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.