ட்ரம்ப் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட நூலுக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ட்ரம்ப் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட நூலுக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின் சர்ச்சைக்குரிய நூலுக்குத் தடைவிதிக்க, வொஷிங்டன் டிசி மாவட்ட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஜோன் போல்டன் புத்தகத்துக்கு தடை விதிப்பதால் எந்த சேதாரம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால், தடை கோரிக்கை ஏற்கப்படவில்லை என நீதிபதி ரோய்ஸ் லேம்பர்த் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம், ஜோன் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புடன் விளையாடிவிட்டார் என்றும், நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்றும் நீதிபதி குற்றம்சாட்டினார்.

பணி தொடர்பான ஒப்பந்தத்தில் பணிக்காலம் தொடர்பாக புத்தகம் எழுதினால், வெளியிடுவதற்கு முன்பாக அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று இருக்கும் ஷரத்தை அவர் மதிக்கவில்லை என ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில், ஏற்கெனவே கசியவிடப்பட்ட இந்த புத்தகத்தை தடை விதித்திருந்தாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், போல்டனுக்கு நீதிபதி தெரிவித்த கண்டனங்களை மிகப் பெரிய வெற்றி என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வுhந சுழழஅ றூநசந ஐவ ர்யிpநநென என்ற தலைப்பில் ஜோன் போல்டன் எழுதியுள்ள குறித்த நூல் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நூலின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

இதில் ட்ரம்ப் தொடர்பான பல சர்ச்சைக்குரிய விடயங்கள் எழுதப்பட்டிருந்தன. இதில் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எழுதியிருந்தார்.

அத்துடன், உய்குர் முஸ்லிம்களை பெருமளவில் தடுத்து வைப்பதற்காக சீனா வதை முகாம்களைக் கட்டுவதாக கடந்த ஆண்டு ட்ரம்பிடம் ஸி ஜின்பிங் கூறியபோது, ட்ரம்ப், முகாம்களைக் கட்டியெழுப்பி முன் செல்ல வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். மேலும் இது சரியான செயலாகும் என்று அவர் நினைத்தார் என அதில் கூறியுள்ளார்.

அவர் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்கான குற்றவியல் விசாரணையை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததாக அந்த நூலில் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணைந்தார். ஈரான், ஆப்கானிஸ்தான், வடகொரியா போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்களில் ட்ரம்ப்பின் முடிவோடு முரண்பட்டு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விலகினார்.