தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய்

தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய்

2018 ஆம் ஆண்டு தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபாய் ஆகும் என கோபா எனப்படும் அரச கணக்குகள் பற்றிய தெரிவு குழுவில் தெரியவந்துள்ளது.

அதில் பெரும்பாலானவற்றை அரச நிறுவனங்களே செலுத்த வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் வரி செலுத்துவதற்காக உரிய நிதி நிலைமையில் தற்போது இல்லை என சுயாதீன சபை ஒன்றினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய அது தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு தெரிவுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலுவை வரி வருமானத்திற்கு மேலும் ஒரு காரணியாக 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான 8 ஆயிரத்து 60 காசோலைகள் செல்லுபடியற்றதாக காணப்படுவதாக இதன்போது திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முதல் வரி அறவீடுகளை உரிய முறையில் மேற்கொள்வதற்காக கணனி கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்காக 4 பில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதும் வரி செயற்திட்டம் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை கட்டமைப்பில் இணைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை செலுத்த நேரிடுவதானது பிரச்சினைக்குரிய விடயமாகும் என அரச கணக்குகள் பற்றிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேசிய வருமான வரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக எச்.எம்.டபிள்யூ.சி.பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.