சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை - ஏர் இந்தியா திட்டம்

வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை-லண்டன் இடையே இடைநில்லா நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மே மாதம் முதல், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சிறப்பு ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் இந்தியா- இங்கிலாந்து இடையிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

 


இந்நிலையில், வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை-லண்டன் இடையே இடைநில்லா நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் இயக்கப்படும் 9-வது நகரம் சென்னை ஆகும். ஏற்கனவே டெல்லி, மும்பை, கொச்சி, ஆமதாபாத், பெங்களூரு, கோவா, கொல்கத்தா, அமிர்தசரஸ் நகரங்களில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை உள்ளது.

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது லண்டனுக்கு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெல்லி, கொச்சி, கோவா, ஆமதாபாத் நகரங்களில் அதிக தேவை உள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.