பெண்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த இராஜாங்க அமைச்சர்!

பெண்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த இராஜாங்க அமைச்சர்!

பெண்கள் பயன்படுத்தும் சுகாதாரத் தயாரிப்புக்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவாகக் குரல் எழுப்பிய நிலையில், சானிட்டரி நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் டயானா கமகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கீதா குமாரசிங்க ஆகியோர் இதுவிடயத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர்.

'இந்த நாட்டில் நூற்றுக்கு 52 சதவீதமானோர் பெண்களாவர். அவ்வாறிருக்கையில் வரவு - செலவுத்திட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெண்களின் சுகாதாரப்பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், சானிட்டரி நாப்கின்களை அத்தியாவசியப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்' என்று சபையில் டயானா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.