அட்டுலுகம பகுதியில் ஒரே நாளில் 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
ஐ.டி.எச் என அழைக்கப்படும் தேசிய தொற்று நோயியில் நிறுவகத்தின் தாதியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் ஊடாக அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் நாட்டில் நேற்றைய தினம் பதிவான 458 கொவிட்-19 நோயாளர்களில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
259 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் கொம்பனி வீதியை சேர்ந்த 90 பேர் அடங்கியுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 78 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியானதுடன் அவர்களில் அட்டுலுகம பகுதியில் மாத்திரம் 74 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று காலை வரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 17,432 ஆக அதிகரித்துள்ளது
அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 14,373 பேர் பேலியகொடை, கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர்.
இந்த இரண்டு கொத்தணிகளிலும் 11,156 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நாள் வரையில் 20,965 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
465 நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,961 ஆக அதிகரித்துள்ளது.
5,910 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன் நமுனுகுல - கனவரெல்ல - 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது
கொழும்பில் இருந்து சென்றிருந்த ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அவருடன் தொடர்புடைய சிலரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 6 பேருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு இன்றைய தினத் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்;ளப்படவுள்ளன.
இதேவேளை, நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடையவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு பிரவேசிப்பவர்கள், கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதற்கமைய அவரிடமும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று காலை 197 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியுள்ளனர்.
கியூ.ஆர் 668 ரக விமானத்தில் கட்டாரிலிருந்து 02 பேரும், யூ.எல்.226 ரக விமானத்தில் டுபாயில் இருந்து 50 பேரும், யூ.எல் 1042 ரக விமானத்தில் இந்தியாவிலிருந்து 92 பேரும், யூ.எல் 104 ரக விமானத்தில் மாலைதீவிலிருந்து 53 பேரும் நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வரையில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,467 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய நாளில் 7,467 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொட பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அவர்களுக்கு இன்றைய தினம் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வெனுரகே சிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைகளில் பயிலும் அம்பலாங்கொடை - நிலகபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால் இன்று பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, வேயங்கொட - பத்தரகெதர - ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மெனிங் சந்தையின் நாட்டாமிமார்கள் மற்றும் யாசகர்கள் 20 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அங்கு 112 நாட்டாமிமார்களும், கொழும்பைச் சேர்ந்த 8 யாசகர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர். பரிசோதனையில் 20 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, முககவசம் அணியாடல் மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்றைய தினம் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சுகாதார விதிமுறைகளை பேணாத 588 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.