நாட்டில் நேற்று பதிவான இறுதி நான்கு கொரோனா மரணங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் மூன்று ஆண்களினதும், பெண் ஒருவரினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.
கொவிட் -19 வைரஸ் தொற்றுடன் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்ட பல உறுப்புகளின் செயலிழப்பு அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
நீண்டநாள் நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானதினால் நோய் அதிகரித்தமை அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் மரணித்தார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.
மரணத்திற்கான காரணம், அழற்சி மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம அட்டுலுகமை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர், நேற்று உயிரிழந்தார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நாள்பட்ட கல்லீரல் நோய் மூளையை பாதித்தமை மற்றும் வீக்கம் ஏற்பட்டமை மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாளில் பதிவான இந்த நான்கு மரணங்களுடன் இலங்கையில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
அண்மைக்காலமாக நாட்டில் பதிவாகிவரும் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மரண வீதத்திலும் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவு தளத்தின் தகவல்களின் அடிப்படையில் மரணங்கள் 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 14 ஆயிரத்து 962 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைவாக, குணமடைந்தவர்களின் சதவீதமானது 71.4 ஆக காணப்படுகிறது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 911 ஆக உள்ள நிலையில், சிகிச்சைப்பெறுபவர்களின் சதவீதமானது 28.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.4 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதள தகவல்கள் தெரிவிக்கின்றன.