பாடசாலைகள் ஆரம்பிக்கும் முறைமை சாதகமாக இல்லை- ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

பாடசாலைகள் ஆரம்பிக்கும் முறைமை சாதகமாக இல்லை- ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

நேற்றைய தினத்துடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை சற்று அதிகரித்திருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் ஓரளவு அதிகரித்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் முறைமை சாதகமாக இல்லை என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

அத்துடன் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதாகவும் அந்த சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பகுதிகளை தவிர்ந்த இடங்களிலுள்ள தரம் 6 முதல் தரம் 13 வரையான பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளுக்காக நேற்று திறக்கப்பட்டன..

இதேவேளை, சுகாதார நடைமுறைகளுக்கு புறம்பாக பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்துகளின் சாரதிகள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்லும் சிற்றூர்ந்து மற்றும் பேருந்துகளின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான மாதாந்த தவணை கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர் என கிடைத்த தகவலையடுத்தே பெற்றோர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.