மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ள 8 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிகளை செய்து வருகிறது.

 

குறிப்பாக, கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

 

இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.

 

இந்நிலையில்,  கொரோனா பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிரா, கேரளா, மேற்குவங்காளம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, அரியானா ஆகிய 8 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் பங்கேற்றார்.

 

இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தல், கொரோனா தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களில் வைரசின் அடுத்த அலை உருவாகத்தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையில், டிசம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமடையலாம் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் மீண்டும் பொது ஊடங்கை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.