பணிஸ் வாங்கச் சென்ற சிறுமி விபத்தில் பலி!
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.