இதய நோயால் போராடிய குழந்தை.... சிகிச்சைக்கு உதவிய பிரசன்னா, சினேகா

இதய நோயால் போராடிய குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு சினேகா - பிரசன்னா தம்பதி உதவி உள்ளனர்.

நடிகர் பிரசன்னா சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு தம்பதியர் அவரை சந்தித்தனர். அவர்களை பார்த்ததும் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என்று பிரசன்னா கருதினார். அருகே நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். திடீரென்று அந்த தம்பதியினர் அழுதனர். 

 

தங்கள் குழந்தைக்கு இதய நோய் உள்ளது என்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறினர். உடனே குழந்தையின் இருதய அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களை பிரசன்னா பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்னது உண்மைதானா என்று தனக்கு தெரிந்த மருத்துவர்கள் மூலம் விசாரித்தார். 

 

சினேகா, பிரசன்னா

 

அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்ததும் அந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பிரசன்னாவும் அவரது மனைவியும் நடிகையுமான சினேகாவும் இணைந்து ரூ.1.5 லட்சம் நிதி உதவி வழங்கினர். இருவருக்கும் குழந்தையின் பெற்றோர் நெகிழ்ச்சியோடு நன்றி கூறினர்.