
இன்றைய நிலவரம்- கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலான முழுமையான தகவல்கள்
நாட்டில் மேலும் 233 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் கொவிட்19 நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.
நாட்டில் இதுவரையில் மொத்தமாக 18 ஆயிரத்து 308 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேலும் 377 பேர் கொவிட்19 தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறினர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் கொவிட்19 நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஐந்தாயிரத்து 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் 10 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
திவுலுப்பிட்டிய மற்றும் பேலியகொடை இரட்டைக் கொவிட் கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 801ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை மற்றும் திவுலுபிட்டிய இரட்டைக் கொத்தணிகளுக்கு மேலதிகமாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியோர் ஆயிரத்து 488 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 950 பேருக்கும், கந்தகாடு கொத்தணியில் 651 பேருக்கும், 103 வெளிநாட்டவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சைப் பெறுவோரில் 540 பேர் புனானை சிகிச்சை மையத்திலும், 414 பேர் பிங்கிரிய சிகிச்சை மையத்திலும், 360 பேர் நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையிலும், 253 பேர் கந்தகாடு சிகிச்சை மையத்திலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 489 பேர் கொவிட்19 சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கொவிட் 19 நோய் காரணமாக இதுவரையில் 66 மரணங்;கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 6080 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் ஐயாயிரத்து 106 பேர் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறையில் 692 பேரும், புத்தளத்தில் 101 பேரும், அனுராதபுரத்தில் 71 பேரும், கண்டியில் 250 பேரும், குருணாகலையில் 250 பேரும், பொலனறுவையில் 17 பேரும், யாழ்ப்பாணத்தில் 25 பேரும், இரத்தினபுரியில் 125 பேரும், கேகாலையில் 191 பேரும், மொனராகலையில் 14 பேரும் கொவிட்19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கல்முனையில் 2 பேரும், மாத்தளையில் 30 பேரும், காலியில் 183 பேரும், அம்பாறையில் 26 பேரும், பதுளையில் 42 பேரும், மாத்தறையில் 27 பேரும் மட்டக்களப்பில் 75 பேரும், ஹம்பாந்தொட்டையில் 22 பேரும், வவுனியாவில் 15 பேரும், திருகோணமலையில் 12 பேரும், நுவரெலியாவில் 48 பேரும் கொவிட்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் கிளிநொச்சியில் மூவரும், மன்னாரில் 10 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவை சுகாதார காரியாலயத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையிலே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
தொற்றுக்குள்ளான 19 வயதுடைய குறித்த இளைஞன் ஹம்பாந்தொட்டைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், அவருடன் தொடர்பை பேணிவர்களின் தகவல்கள் பெற்று அவர்களையும் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.