கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை

கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை

எந்தவொரு நபரும், பொதுப்போக்குவரத்து மற்றும் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கும், உட்பிரவேசிப்பதற்கும் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் விதிக்கப்பட்ட தடையானது நேற்று நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கொழும்பில் இறங்கி, வேறொரு பகுதிக்கு பயணத்தை மேற்கொள்ள முடியும்.

பேருந்து நிலையத்தில் இருந்து தொடருந்து நிலையத்திற்கு பயணிப்பதற்கு அனுமதியுள்ளது.

எவ்வாறாயினும், கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை.

கொழும்பு மொத்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேறு பகுதிகளில் இருந்து மரக்கறிகள் கொண்டு வந்தால் அதனை நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியும் என காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் திடீர் சுகயீனம் ஏற்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இருப்பின் வைத்தியசாலைக்கு எந்தவொரு அவசர சந்தர்ப்பத்திலும் செல்ல முடியும்.

அவர்கள் இதற்கான அனுமதியை காவற்துறையில் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவரேனும் சுகவீனம் அடைந்திருப்பின் 011 34 22 558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி நோயாளர் காவுகை வண்டியினை பயன்படுத்தி வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை விடுவிப்பதும், அதனை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அமுலில் இருப்பதும் அங்குள்ளவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் 19 பரவல் என அடையாளம் காணப்பட்ட 24 காவற்துறை அதிகார பிரதேசங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 7 காவற்துறை அதிகார பிரதேசங்களும், கொழும்பில் 17 காவற்துறை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு மற்றும் களனி காவற்துறை அதிகார பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தை பொருத்தமட்டில் ஆட்டுப்பட்டித்தெரு, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, கரையோரம், முத்துவேல், கொட்;டாஞ்சேனை, மட்டக்குளி, புளுமெண்டல், கிராண்ட்பாஸ், தெமட்டகொடை, பொரளை, வெல்லம்பிட்டி, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, டேம் வீதி மற்றும் கொம்பனித்தெரு ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.