பேலியகொட மீன் சந்தை எப்போது திறக்கப்படும்..? கடற்றொழில் அமைச்சு வெளியிட்ட அறிக்கை

பேலியகொட மீன் சந்தை எப்போது திறக்கப்படும்..? கடற்றொழில் அமைச்சு வெளியிட்ட அறிக்கை

கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இதற்கமைய பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக மேற்கொள்வது தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக் காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கின்ற முயற்சியின் முதற் கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் பரவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த மீன் வியாபார நடவடிக்கையின் போது, நாணயத்தாள் பரிமாற்றத்திற்கு பதிலாக இணைய வழி பணப் பரிமாற்றத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.