
மக்கள் தொடர்பில் அரசாங்கம் அசண்டையீனமாகச் செயற்படுகின்றது - எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தினால் வெற்றிகரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறுவனமான பைசர் மற்றொரு நிறுவனமும் வெற்றிகரமான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 100 இற்கு 90 வீதம் தொற்றை தடுக்க கூடிய தடுப்பூசியை அந்நாடு கண்டுபிடித்துள்ளது.
அந்த தடுப்பூசி குறித்து தற்போதைய அரசாங்கம் என்ன தீர்மானம் எடுத்துள்ளது? இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பைசர் நிறுவனத் தோடு ஏதாவது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதா? குறித்த தடுப்பூசியை இறக்குமதி செய்து அதற்கு ஏற்ப வெப்பநிலையில் வைப்பதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினர் ஏற்பாடு செய்துள்ளனரா? எனக்குத் தெரிந்த வரையில் எந்த நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளவில்லை.
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் கழுகு பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
குறித்த தடுப்பூசி இறக்குமதி செய்ததுடன், அதை இந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யும் சகலதையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.