
இளம்சமூகத்தை முன்னேற்றம் செய்வதற்கு நாமல் எடுத்துள்ள நடவடிக்கை!
சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு அரச வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருகின்றார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது, இளைஞர்கள் வணிக கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எனக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மூலம், இளைஞர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி நிதி உதவியைப் பெற உதவும் ஒரு கடன் திட்டத்தை வடிவமைக்க இலங்கை மத்திய வங்கியுடன் அமைச்சு கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளேன்.
தற்போது, தனியார் மற்றும் அரச வங்கிகளில் இந்த கடன்களுக்கான வட்டி மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் சிறு நிறுவன உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாமல் போகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி கடன் திட்டத்தை நிறுவ அமைச்சு போதுமான நிதியை ஒதுக்குகிறது, இதனால் இளைஞர்களுக்கு இலகுவாக வணிக கடன்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.