தொடர்மாடி குடியிருப்புகளில் இலவச நடமாடும் வைத்திய சேவை...!
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இலவச நடமாடும் வைத்திய சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் நோய் நிவாரணத் திணைக்களம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை இந்த இலவச நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முகத்துவாரம் மெத்சத செவன தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இன்று காலை 9 மணிக்கு இந்த இலவச நடமாடும் வைத்திய சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அடுத்துவரும் நாட்களில் முகத்துவாரத்தின் மஹிஜய செவன ரண்மின செவன ரந்திய செவன ரண்முத்து செவன சத்ஹிரு செவன லக்ஹிரு செவன முதலான தொடர்மாடி குடியிருப்புகளிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேநேரம் ப்ளூமெண்டல் - சிறிசந்த உயன சிறிமுத்து உயன தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளிலும் இந்த இலவச நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
மாளிகாவத்தை - என்.எச்.எஸ் வீடமைப்புத் தொகுதி பாலத்துறை - முவதொர உயன முதலான தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளிலும் இந்த இலவச நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு நகரில் உள்ள மக்கள் தங்களது மருத்துவ துறைசார் பிரச்சினைகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வைத்திய குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.