
மேல் மாகாணத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்...!
மேல் மாகாணத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடை நேற்று நள்ளிரவுடன் தளர்த்தப்பட்டுள்ளது
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ள இடங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாது.
அதேநேரம் இன்று அதிகாலை 5 மணி முதல் புறக்கோட்டை கோட்டை மருதானை கொம்பனித்தெரு டேம் வீதி மற்றும் களனி ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி முகத்துவாரம் கரையோரம் கிராண்ட்பாஸ் தெமட்டகொடை கொட்டாஞ்சேனை புளுமெண்மல் பொரளை வெல்லம்பிட்டி ஆட்டுப்பட்டிதெரு மாளிகாவத்தை வாழைத்தோட்டம் அங்குலானை ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பேலியகொடை கடவத்தை ராகமை ஜாஎல மற்றும் நீர்கொழும்பு ஆகிய காவல்துறை காவல்துறை அதிகார பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேறவோ உட்பிரவேசிக்கவோ முழுமையாக தடைவிதிக்கப்பட்டள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்திய பகுதியில் வாழும் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றுவார்களாயின் விரைவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.