தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியுமா?

தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியுமா?

சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்குள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அதிகளவான நிறுவனங்கள் காணப்படுவதனை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்தாக இராணுவத் தளபதி கூறினார்.

இன்று (15) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.

´கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் அதிகளவான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆகவே இவற்றை மூட முடியாது. எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பவில்லை. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் கடமையாற்றும் பணியாளர்கள் தனது நிறுவனத்தை உறுதிப்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தல் பகுதிக்குள் பிரவேசிக்க முடியும்´.

நாளை (16) காலை 5 மணி முதல் மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.