அவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்: மக்கள் மீது பழிபோடும் சுகாதார அமைச்சு

அவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்: மக்கள் மீது பழிபோடும் சுகாதார அமைச்சு

அச்சுறுத்தலான சூழ்நிலைக்கு மத்தியிலும் அதனை கருத்தில் கொள்ளாது பொது மக்கள் தொடர்ந்தும் கவனயீனமாகச் செயற்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

எழுமாறாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளிலும் கூட கொழும்பு நகரில் 5 வீதமான கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளங் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமது விடுதியின் உடற்பிடிப்பு பிரிவில் பணியாற்றிய ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக அதன் முகாமைத்துவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உடற்பிடிப்பு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ருவென்வெல்லை சுகாதார மருத்துவ அதிகாரி பகுதிக்குட்பட்ட கரவனெல்லை வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

அவர் ருவன்வெல்லை - முதுகம - வராவல பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.