
கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிப்பதா அடக்கம் செய்வதா? இறுதி முடிவு தொடர்பில் சுகாதார அமைச்சர் தகவல்
கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பதை அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரஸ தொற்றிய நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கும் செய்வது சம்பந்தமாக பல்வேறு நபர்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த விடயம் சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கைகள் கிடைக்க உள்ளன. அத்துடன் அண்மையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
அமைச்சரவையில் இந்த விடயம் முன்வைக்கப்பட்ட போது, விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என நான் அமைச்சரவைக்கு அறிவித்தேன். இதனால், அந்த அறிக்கை கிடைத்தது இறுதி தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.