
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி..!
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இவ்வாறு தொற்றுறுதியான அனைவரும் ஏலவே கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் திவுலுபிட்டிய மற்றும் பேலியகொடை இரெட்டைக் கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 107 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 5 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி, கொவிட் - 19 தொற்றினால் நாட்டில் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதென அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14ஐ சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு நோயுடன் ஏற்பட்ட கொவிட்-19 தொற்று என்பன மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், சிலாபம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் மரணித்தார்
அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்று ஏற்பட்டதுடன், அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டமை மற்றும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவரும் மரணித்தார்.
இருதய கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் மரணம் சம்பவித்துள்ளது.
அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டதுடன், இருதய கோளாறு ஏற்பட்டமை குறித்த நபரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொழும்பு - 13 ஐ சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்று ஏற்பட்;டதுடன், குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டமை மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொழும்பு - 13 ஐ சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரும் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
மூச்சிரைப்பினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு, கொவிட்-19 தொற்று ஏற்பட்டமை மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொவிட்-19 தொற்றுறுதியான 378 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் வைரஸ் தாக்கம் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை மேல்நோக்கிய நிலைகளில் பதிவாகி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நேற்றைய நாளின் நிலவரப்படி இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 101 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள சாம்பியாவில் 17 ஆயிரத்து 93 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை சர்வதேச நாடுகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 37 இலட்சத்து 19 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலடசத்து 453 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் 3 கோடியே 74 இலட்சத்து 89 ஆயிரத்து 363 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.