
நாளை தீபாவளி பண்டிகை
இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் நாளைய தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவுள்ளனர்.
எனினும் கொவிட்19 பரவல் காரணமாக இந்தமுறை தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி கோவில்கள் மற்றும் தோட்டக் கிராமங்களில் அல்லது சமுகங்களில் ஒன்றுக்கூடி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தத்தமது வீடுகளில் தங்கி இருந்து இந்தமுறை தீபாவளியை கொண்டாடுவதே உசிதமானது என்று சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் மதுசாரம் கலந்த தொற்றுநீக்கி திரவங்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தியதன் பின்னர், தீயுடன் சம்மந்தப்பட்ட விளக்கேற்றுதல், பட்டாசு கொழுத்துதல் போன்ற கருமங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உறவினர்களது வீடுகளுக்கு செல்லுதல், மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் என்பவற்றையும் தவிர்க்க வேண்டும்.
மேல் மாகாணத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதனை மீறி செல்வோர் அவர்கள் இருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு கட்டாயக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்து மக்கள் சகலரும் தத்தமது வீடுகளில் இருந்து அகவணக்கத்துடன் இந்தமுறை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுமாறு இந்துமதத் தலைவர்கள் கூட்டாக நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, தீபாவளி பண்டிகை, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.
அதேபோன்று தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் தீபாவளியை முன்னிட்டு நகர்பிரசேங்களுக்கு வருவோரது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலமையினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அறிவுரைகளின் பிரகாரம் விழாக்களை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, பொதுமக்கள் வீட்டில் இருந்தே தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றை விடுத்து கோரியுள்ளார்.