
திருமண அழைப்பிதழை பரிமாறிய கொரோனா தொற்றாளர்! 50 பேர் தனிமைப்படுத்தலில்
களுத்துறை - பன்வில பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் ஒருவர் திருமண அழைப்பிதழை வழங்கிச் சென்றுள்ளதால் குறித்த வீடுகளில் வசிக்கும் சுமார் 50 பேர் நேற்று மாலை முதல் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் எச்.பி.ஜயநாத தெரிவித்துள்ளார்.
அளுத்கமை பொலிஸ் பிரிவில் உள்ள பாதாகொட மற்றும் கல்ஹேன பிரதேசங்களில் உள்ள 9 வீடுகளுக்கே அவர் சென்றுள்ளார்.
PCR பரிசோதனை செய்துக்கொண்ட ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் போது பிரதேசத்திற்கு பிரதேசம் பயணம் செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியே இவ்வாறு அழைப்பிதழ்களை வழங்கியுள்ளார்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாதாகொட மற்றும் கல்ஹேன கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் நபர்களில் பயாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், கிராம சேவகர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.