நிகவெரடிய பகுதியில் வீசிய பலத்த காற்று- 230 வீடுகளுக்கு சேதம்
நாட்டில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் நிகவெரடிய பகுதியில் வீசிய பலத்த காற்றில் சிக்கி சுமார் 230 வீடுகளும் 24 வியாபார நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் வேளையில் இடம்பெற்றதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே பலத்த காற்று வீசியதன் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.