கொரோனா தொற்றால் இன்றைய தினம் மரணமடைந்தவர்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்

கொரோனா தொற்றால் இன்றைய தினம் மரணமடைந்தவர்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்

கொவிட் 19 தொற்றால் நாட்டில் மேலும் 3 மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

இதன்படி கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததுடன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமாகியுள்ளார்.

கடந்த முதலாம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மராடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமாகியுள்ளார்.

காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மரடைப்பால் அவர் உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து இன்று மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் 4 ஆயிரத்து 491 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.