பஹ்ரைன் நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற சிறப்பை பெற்ற ஷேக் கலிபா இன்று காலமானார்.
பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா (வயது 84). பஹ்ரைன் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமை பெற்றவர் ஷேக் கலிபா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மேயோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதமர் ஷேக் கலிபா இன்று காலையில் காலமானார்.
அவர் காலமான செய்தியை பஹ்ரைன் அரண்மனை அறிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மன்னர் தெரிவித்ததாக பஹ்ரைன் செய்தி நிறுவனம் கூறி உள்ளது.
ஷேக் கலிபாவின் உடல் அமெரிக்காவில் இருந்து பஹ்ரைன் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.