கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் குழந்தைகளுட்பட 56 பேருக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் குழந்தைகளுட்பட 56 பேருக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில், இதுவரை 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்ட 46 பேர், ஐந்து வைத்தியர்கள், மூன்று தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இருவர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, அவர்கள் சிகிச்சைககளுக்காக தேசிய தொற்று நோய் வைத்தியசாலை உள்ளிட்ட, ஏனைய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலையின் பணியாளர் குழுவைச் சேர்ந்த 90 பேர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜி.விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளர்களை சந்திப்பதற்காக, வெளியில் இருந்து வருகை தரும் நபர்கள் ஊடாகவே, வைத்தியசாலையில், கொரோனா பரவல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில், நோயாளர்களை சந்திக்க, நாளாந்தம் ஒருமுறை மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்நுழைவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய கூறியுள்ளார்.

அத்துடன், நோயார்களை சந்திப்பதற்காக வழங்கப்படும் நேரம், 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நோயாளர் விடுதிகளில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் தொடர்புடையோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, அச்சமின்றி வைத்தியசாலைக்கு அழைத்துவர முடியும் என கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.