கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

மூன்று வருடங்களுக்கு கிழங்கு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வாழ்வாதார மேம்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது இதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெரிய வெங்காய விதைகளை தம்புள்ளையிலும் உருளைக்கிழங்கு செய்கைக்கான விதைகளை நுவரெலியாவிலும் மிளகாய் விதைகளை கண்டி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கு தேவையான விதை உற்பத்திகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாய காப்புறுதியை 02 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மாத்தளை மாவட்ட விவசாய நடவடிக்கைகளுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்புள்ளை உர களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகளுக்காக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத குடியிருப்பாளர்களை அங்கிருந்து வௌியேற்றி மாத்தளை உர களஞ்சியசாலையை முன்நோக்கி கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.