கிழக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது ...!

கிழக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது ...!

கிழக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.

வாழைச்சேனை - கோரளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

அதேநேரம், கொழும்பு - வெள்ளவத்தையில் இருந்து திருகோணமலைக்கு சென்று மரண சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்ட ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 510 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் கொவிட் 19 தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலபிட்டி, பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 5 ஆயிரத்து 609 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

63 பெண் கைதிகளுக்கும், 8 ஆண் கைதிகளுக்கும் ஒரு பணியாளருக்கும் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், அவிசாவளை - சீதாவாக்கை ஏற்றுமதி வலையத்தில் உள்ள தொழிற்சாலையில் சேவையாற்றும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, தொற்றாளர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்கான உபகரணம் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள ஆய்கூடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான தொற்நோய் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றின் பாதிப்புக்களில் இருந்து விடுபட வேண்டும் என நாட்டில் உள்ள மத ஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் மலையக பகுதிகளில் உள்ள வணக்கஸ்தலங்களில் இந்த விசேட வழிபாடுகள் இடம்பெற்றது