டெஸ்ட் கேப்டன் பதவியை பாபர் அசாமிடம் கொடுக்கலாம்: வாசிம் அக்ரம்

டெஸ்ட் கேப்டன் பதவியை பாபர் அசாமிடம் கொடுக்கலாம்: வாசிம் அக்ரம்

நியூசிலாந்து தொடருக்கு முன் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பாபர் அசாமுக்கு அக்ரம் ஆதரவு கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாம். திறமையான பேட்டிங்கால் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். இவரது திறமையை பார்த்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலி இருந்தார். ஒரு வருடம்தான் அவரை கேப்டனாக நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. விரைவில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் மற்றும 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அதாவது வருகிற 11-ந்தேதிக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார். பாபர் அசாமை கேப்டனாக நியமிக்கலாம் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘முன்னாள் வீரராக என்னிடம் கேட்டால், டெஸ்ட் கேப்டனாக பாபர் அசாமை நியமிக்க சொல்வேன். ஏனென்றால் அவர் பாகிஸ்தான் அணியின் எதிர்காலம். அவரால் நீண்ட காலம் விளையாட முடியும்’’ என்றார்.