கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியம்

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியம்

களுத்துறை மாவட்டத்தில்– மத்துகம - பதுகம புதிய கொலனி பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதி  தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுமையாகத் திறக்கப்படக்கூடும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு திறக்கப்படக்கூடும்.

இந்த சந்தர்ப்பத்தில், உலகில் தற்போது நடைமுறையில் உள்ள எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

புதிய வழமைப்படுத்தல் என்ற அடிப்படையிலான அந்த எண்ணக்கருவுக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தினால்கூட, சில ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற நிலையில், அதனுடன் வாழ பழகுவது தொடர்பான எண்ணக்கருவே அதுவாகும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, மேலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கும்.

வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில், அதனைக் கட்டுப்படுத்தி வாழவேண்டிய நிலை உள்ளது.

முகக்கவசம் அணிதல்,  கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பனவே, இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மிகமுக்கியமான உபாயங்களாகும்.

இதற்கமைய, பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தாய்லாந்து மற்றும் தாய்வான் முதலான நாடுகள் நிரூபித்துள்ளன.

எனவே, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியமாகும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகின்ற பகுதிகளில், இந்தவார இறுதியில் காவல்துறை வீதித் தடைகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை கடுமையாக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 112 காவல்துறை அதிகார பிரிவுகளிலும், குளியாப்பிட்டி,  எஹலியகொட  மற்றும் குருநாகல் மாநகர சபை அதிகார பகுதிகளிலும் தற்போதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் 55 துறைகளை முன்னிறுத்திச் செயற்பட வேண்டிய முறைகள் தொடர்பான வழிகாட்டல்களைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக இந்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அத்தியாவசிய சேவை அல்லது அனுமதி வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டால் வீட்டிலிருந்து இரண்டு பேர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள், மேலதிக வகுப்புகள், திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், மிருககாட்சிசாலைகள், கெசினோ சூதாட்ட விடுதி, இரவு நேரக் களியாட்ட விடுதிகள் மற்றும் உடல் பிடிப்பு நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

உட்புற மற்றும் வெளிப்புற விழாக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கடற்கரை விழாக்கள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. 

நபர்களுக்கு இடையில் 1 தசம் 5 மீற்றர் இடைவெளி பேணப்பட்டு, சிறப்பு அங்காடிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு நேரத்தில் வர்த்தக நிலையத்திற்குள் இருக்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்பட வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளின் போது அமரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் வாடகை வாகனங்களான மகிழுந்து மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றில் ஒரு நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் அலுவலகங்களின் சேவையாளர்கள் குறைக்கப்படுவதோடு ஏனையோர் வீட்டிலிருந்து சேவையாற்றுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மங்கள நிகழ்வுகளின் போது 50 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதோடு மரண வீடுகளில் 25 பேர் மாத்திமே அனுமதிக்கப்படுவார்கள்.

மதஸ்தலங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே இருக்க முடியுமெனக் குறித்த வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் மக்கள் ஓன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.