இன்றுடன் ஒரு மாதகாலம் நிறைவு...!

இன்றுடன் ஒரு மாதகாலம் நிறைவு...!

மினுவாங்கொடை ப்ரேண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தைக் கொரோனா கொத்தணி பரவல் ஏற்பட்டு, இன்றுடன் ஒரு மாதகாலம் ஆகியுள்ளது.

இந்த கொத்தணிகளில் இதுவரையில், 7 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் 275 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் 232 பேர், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளுடன் தொடர்புடையவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து 335 பெருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

6 ஆயிரத்து 65 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, 5 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹப்புத்தளை - கொஸ்லந்த பகுதியில் பிறந்து 13 நாட்களேயான குழந்தை ஒன்று உட்பட, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

அந்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள், அண்மையில் கம்பஹா பகுதியிலிருந்து கொஸ்லந்த பகுதிக்கு சென்றதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன் குழந்தையின் தாத்தாவுக்கு கொழும்பில் வைத்து கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் பேலியாகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர் என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்று பரவும் நிலையில் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்

இதேவேளை ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அவருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த வங்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த வங்கியில் பணியாற்றிய சேவையாளர்கள் தமது வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்