கேகாலை - புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று

கேகாலை - புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 633 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 138 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 495 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 6 ஆயிரத்து 123 கொவிட் 19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறன்றனர்.

எனினும் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியில் இருந்து மேலும் 140 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 55 பேர் இதுவரை கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுறுதியானது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்; பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல்; மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கொரோனாத் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும்

இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது

இதேவேளை, கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து மிரிஹான காவற்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட மாதிவெல - பிரகதிபுர மற்றும் ராஹூலபுர ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கேகாலை - புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து புளத்கொஹூபிட்டி மற்றும் லேவல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் வரை குறித்த தடை விதிக்கப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது.