சீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து!

சீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனா வைரஸ் பரவும் அச்சநிலை காரணமாக ஆயிரத்து 235 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங் விமான நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த உள்நாட்டு, சர்வதேச விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதுடன் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மக்களுக்குப் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள சீன அரசாங்கம், இதுவரை 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளது. அதில், பீஜிங்கில் மட்டும் தற்போதுவரை 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்றுவந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதியிருந்து 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்றுவந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் பீஜிங்கில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனையை சீன அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அத்துடன், இன்று பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மீண்டும் இணையத்தள வகுப்புகளுக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நூலகங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் 30 சதவீதத்துக்கும் மேல் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மக்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்து பீஜிங் நகருக்கு வரவும் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு யாரும் செல்லக்கூடாத இடமாக பெய்ஜிங் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், பீஜிங்கில் இன்று புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 11 பேருக்கு அறிகுறியில்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.