அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆமி கோனி பாரெட்டை நியமிக்க செனட்சபை ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு. அவர்களில் ஒரு பெண் நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் கடந்த மாதம் புற்றுநோயால் காலமானார். இதனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியானது. இதையடுத்து மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான ஆமி கோனி பாரெட்டை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்தார். எனினும் டிரம்பின் இந்த நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யப்பட்ட பின்னரே காலியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியை நிரப்ப வேண்டும் என்றும் எனவே டிரம்பின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் ஜனநாயக கட்சி வலியுறுத்தி வந்தது.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் நியமனம் தொடர்பாக டிரம்பின் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் டிரம்பின் நியமனத்துக்கு ஆதரவாக 52 ஓட்டுகளும் எதிராக 48 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம் ஆமி கோனி பாரெட்டை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க செனட்சபை ஒப்புதல் அளித்தது.
அதனை தொடர்ந்து ஆமி கோனி பாரெட் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.